மாரிக்காலம்
*****************
நமக்கு இப்போது மாரிக்காலம். மாறி, மாறி, புயல்கள் தாக்குவதால் " மாறி"க்காலமா?
அல்லது
வானிலை அறிக்கைக்கு மாறுபட்டுப் பொழிவதனால், " மாறி"க்காலமா?
மாதம் மும்மாரி பொழிந்த காலம் உண்டாம்.
இன்று ஒரே நாளில் மும்மாரி!
அன்று மாதம் மும்மாரி பொழிய, கூறிய காரணங்கள் தற்காலத்துக்கு சரி வராது.
இன்று அளவோடு மழை பொழிய
⁃ மண் பயனுற உதவும் ஆர்வலர்களுக்கு ஆதரவத் தோள் கொடுத்தல்
⁃ நெகழிப் பயன்பாட்டைக் குறைத்தல்; நெகழி மறுசுழற்சி
⁃ நீர்நிலைகளை ஆக்ரமிக்கும்
⁃ நவீன அரக்கர்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்தல் எனப்பலப்பல என உத்திகளைக் கையாள வேண்டும்.
சுற்றுச்சூழல் மாற்றங்கள், புவி சூடாதல் என்று நம்கண்ணை நாமே குத்திக்கொண்டு பணக்கார நாடுகளில் மாநாடுகள் நடத்தி சூரிய நமஸ்காரம் செய்ய முயலும் அவலம் குறைய வேண்டும்
இந்த டெட்வா புயல் கரையோரமே மெதுவாக நகர்கிறது, " நிறை சூலி போல நிறைய நீரை சுமந்து கொண்டு மேலே எழம்ப முடியாமல்!
கடல் முகந்து கொண்ட காமஞ் சூல் - அகநானூறு 43
ஆந்திரா பக்கம் பிரசவிக்க வாய்ப்பு, சுகப்பிரசவமாக, ஆக, சுந்தரத்தெலுங்கர்கள் மகிழ.
இன்றுதான் வானிலை கணிப்பு என்றில்லை.
மழைப்பொழிவை முன்பே கணித்த குறிப்புகளும் உண்டு,
"பொய்யா எழிலி பெய்விட நோக்கி முட்டைக் கொண்டு வற்புலஞ் சேரும் சிறு நுண் ணெறும்பின்" - புறநானூறு 173
எறும்புகள் தம் முட்டைகளை எடுத்துக்கொண்டு சற்று மேட்டு நிலத்துக்குச் சென்றால் மழை பெய்யவுள்ளதாக பொருள்.
இயற்கையாடு ஒட்டிய வானிலை முன்கணிப்பு, அப்போதே!
மழை சார்ந்த வட்டார வழக்கைகளை எண்ணும்போது பெரும்பாலும் உழைப்புச் சார்ந்த வெளிப்பாடாகவே இருக்கின்றன.
"தவளை கத்தினால்தானே மழை!"
"அந்தி ஈசல் பூத்தால், அடை மழைக்கு அச்சாரம்"!
"மார்கழி மழை மண்ணுக்கு உதவாது!"
"தை மழை நெய் மழை!"
"மழையடி புஞ்சை, மதகடி நஞ்சை!"
மழையைக் கொடையோடு ஒப்பிட்டனர், பழந்தமிழ் புலவர்கள்.
நம் காதில் சரியாக விழவில்லை. மழை என்றால் குடைதான் நினைவுக்கு வருகிறது!!
-இ.ச.மோகன்,
No comments:
Post a Comment