Sunday, August 24, 2025

கோடையிடி காமுவும், தொடை நடுங்கி சோமுவும்.

 கோடையிடி காமுவும், தொடை நடுங்கி சோமுவும்.

( ( நகைச்சுவைக் கதைகள்)

படைப்பாளிதிரு ஶ்ரீ வெங்கடேஷ் ஐயா.

ஒரு கருத்துக் கண்ணோட்டம்.


படித்ததின் சாராம்சம்:

நற்சுவையாவது இவர் நகைச்சுவையே.


கருத்து விவரணம்:

நகைச்சுவை என்பது மனிதனின் மன இறுக்கத்தைப்போக்கும் ஓர் அருமருந்து;இறைவனால்  மனிதனுக்கு அளிக்கப்பட்ட அரிய வரமும் கூட. 

தமிழ் இலக்கியங்களில் நகைச்சுவையைப் பற்றிய குறிப்புகள் உண்டு. தொல்காப்பியர் எட்டு மெய்ப்பாடுகளில் முதன்மையாக, கூறுவது  நகைதான்.

வள்ளுவரும் சிரித்து வாழ வேண்டும் என பதை

நகல்வல்லர் அல்லார்க்ககு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள் (பண்புடைமை999)  என்னும் குறளை வள்ளுவர் கூறியுள்ளார்.இதன்பொருள் சிரிக்கத் தெரியாதவனுக்கு இந்தப் பெரிய உலகத்தில் பகற்பொழுது கூட இருட்டாகவே இருக்கும் என்பதாகும்.


நகைச்சுவைப் பல வகைப்பட்டாலும், பிறர் மனம் புண்படாமல், உருவக்கேலியடிக்காமல், கோணங்கிகள் செய்யாமல் , சிரிக்கவும் அதே சமயம் சிந்திக்கவும் வைத்தால்  அது பண்பட்ட வகையாகும். இங்கு காண்கிறோம்.


சரி சரி விடயத்துக்கு வாய்யா!


ஶ்ரீவி அவர்களின் பண்பட்ட நகைச்சுவைப் படைப்பான,கோடையிடிக்காமுவும், தொடைநடுங்கி சோமுவும் நூலைப் படித்தேன் ,ரசித்தேன், பகிர்கிறேன்.


177 பக்கம் ஒரு பொருட்டே அல்ல. ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.


சற்றே மேல்தட்டில் உள்ள நடுத்தர வர்க்கத்தை சார்ந்த ஒரு தம்பதிகளின் அன்றாட வாழ்வு நிகழ்வுகளை நகைச்சுவைக் கண்ணோட்டத்தில் பார்க்கும் ஒரு தொகுப்பு.நம்அன்றாடம் காணும் மனிதர்கள்தாம்,நிறை , குறைகளோடு. இதுவே நம்மை  பாத்திரங்களோடு ஒன்றச்செய்கிறது.


ஒரு குடும்பத்தில் மனைவி அதிகாரம் செய்பவளாகவும், கணவன் அடங்கி நடப்பவனாகவும் இருப்பது என்பது ஒரு மேலோட்டமான கண்ணோட்டம்தான். மனைவி கணவனை ஆள்வதும் , கணவன் அடங்குவது போல இருப்பதும், இரட்டை மாடுகள் பூட்டிய வண்டி சீராக செல்வது போல வாழ்க்கை வண்டியை ஓட்ட உதவும் ஒரு உத்திதான்.


காமுவும் சோமுவும் இதற்கு விதிவிலக்கல்ல.


காமு தன் தோழியரின் சமூக அந்தஸ்துக்கு சமமாக உயர பல அவதாரங்களை எடுக்கிறாள்; எடுக்க உதவும் எடுபிடியாக, சோமு.

கிரிக்கெட் வீர ராக,யோகா பயிற்சியாளாராக,,ஓவியராக,பரதநாட்டியம் கற்பவராக,சமையல் கலை வல்லுனராக எனப்பல பல முயற்சிகள் காமு செய்தாலும், சோமு சளைக்காமல் துணை நிற்கிறான், பணச்சிக்கனம்பாராமல்,உடல்உழைப்பைத் தந்து,

தன்அறையைத் த த்தம் செய்து,என்று பலவாறாக.


அவன் தொடை நடுங்கியா? 


அவனுக்குத்தான் மனக்குரல் துணையாக  நிற்கிறதே! அது ஒரு இடிதாங்கியாக கோடையிடியை, சமாளிக்க உதவுகிறது.


இந்நூலில் சோமுவின் மனக்குரல் மூன்றாவது பாத்திரம் , தொடை நடுங்கிக்கு, படைபலமாக, அருவமாக.

இது படைப்பாளியின் படைப்பாற்றல் திறனைக் கோடிட்டுக் காட்டுகிறது.


மனக்குரலோடு பேசியே, மனக்குறைகளுக்கு, விடியல் காண முயலும் கணவர் குழாம் நாட்டில் ஏராளம், ஏராளம்!


பஞ்ச் டயலாக் ஆக சோமு காமுவைப்பல முறை சமாளிப்பான்.

ஒரு உதாரணம்:

காமு கிரிக்கெட் அகாடமியின் பெருமைகளைக் காலட்சேபம் செய்ய , கொடுமை தாளாமல் சோமு" ஹா வ்ங்" என்று கொட்டாவி விட்டாலும், " வாவ்" என்றேன், என்று சமாளிப்பான்.

முத்துராமன் ஒரு திரைப்படத்தில் மனவி லட்சுமியை " என்ன டீ "என்று அழைத்துவிட்டுப்பின்பு , " என்ன நீ " என்று அழைத்தேன்  என்று சமாளிப்பார்.


சவாலை சமாளிப்பதே வேலையாப்போச்சு  , நமது சோமுவுக்கு.

நிகழ்வுகளை  விவரிக்கையில் , ஆசிரியர் அந்த நிகழ்வுக்கு உரிய நுட்பச்செய்திகளை , ஆங்கில எழுத்தாளர் ஆர்தர் ஹெய்லி போல நுணுக்கமாக,எடுத்துரைக்கிறார், கிரிக்கெட் கிட், ஆகட்டும், ஓவிய உபகரணங்கள் ஆகட்டும் என.

உழைப்பு தெரிகிறது.


மேல்தட்டு திருமண விழாக்களில் 

உண்ணும் தட்டுக்களில் வேறுபாடு செய்யும் நாகரீகத்தின் தலைவிரி கோலத்தை நம்மில் பலர் அனுபவித்து இருப்போம். இங்கு படைப்பாளி  எழுத்து  சித்திரமாகத் தீட்டுகிறார். 

அதி அற்புதம்!


அணியும் உடை, அளிக்கும் மொய் இவற்றைப் பொருத்து, பால் பாயசம்/ பஞ்சாமிர்தப்பச்சடி. இல்லேயேல் வெறும் கிச்சடி!

விவரிக்கும் விதம் உதடுகளில் முறுவலை நிச்சயம் வரவழைக்கும்.


வீட்டில் எலியாக இருக்கும் சோமு 

அலுவலகத்தில் புலி. இங்கு மறைந்த படைப்பாளி தேவனின் துப்பறியும் சாம்பு பாத்திரம் நினைவுக்கு வருகிறது.


காமு ஒரு நடுத்தர  இல்லாளின் விருப்பம் கூடிய எதிர்பார்ப்புகளை (அபிலாஷைகளை) பிரதிபலிக்கிறாள்.


காமுவின் நடவடிக்கைகள், " வரவு எட்டணா,  செலவு பத்தணா" என்று தோன்றலாம்.

நமக்குப் பழக்கமானதுதான்!


நம்மில் நடமாடும் பாத்திரங்களாகப்படைத்து நகைச்சுவையோடு நிகழ்வுகளை நகர்த்தி   நம்மையும் ஆழ்ந்து அசை போட்டு   நமது இருக்கையிலேயே,நகைக்க வைக்கிறார்.


" குழந்தைப் பாதுகாப்பு பூட்டு" தேவையின்றி ஒட்டு மொத்த குடும்பமும் படித்தோ, படிக்கக்கேட்டோ  ரசிக்கலாம்.


வாழ்த்துகள் ஐயா!


- மோகன்

=========================


 எளியவளின் புத்தக விமர்சனம்..எனக்கும் இது கன்னி முயற்சி😀


கோடையிடிக் காமுவும் தொடை நடுங்கி சோமுவும்

(முதல் இரண்டு கதைகள் வரை)


ஆசிரியர் : உயர்திரு ஸ்ரீவி ஐயா


நான் அதிகம் புத்தகங்களை வாசிப்பதில்லை. இந்த நல்ல பழக்கத்தை பழகிக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்.

இதுவரை இப்புத்தகத்தில இரண்டு கதைகள் மட்டுமே படித்து முடித்துள்ளேன்.

அதற்குள் ஏன் விமர்சிக்க வேண்டும்? மூன்று காரணங்கள்.

முதலில் ..மோகன் ஐயாவின் நீண்ட பதிவைப் பார்த்து பின்னூட்டம் இட நினைத்தது.

இரண்டாவது.. என் விமர்சனம் மற்றவர்களையும் இப்புத்தகத்தைப் படிக்கத் தூண்டலாம்.


மூன்றாவது ..அவ்வப்போது சொல்லவில்லை என்றால் சொல்ல எண்ணிய சில விடயங்களை மறந்துவிடுவேன். 


சரி..என் சுய புராணம் விட்டு விடயத்திற்கு வருகிறேன


1. புத்தக வடிவமைப்பு அருமை


2. உயர்திரு. சாய்ராம் அவர்களின்

அணிந்துரை இந்நூலுக்கு அணி சேர்த்துள்ளது. சில நகைச்சுவை ஜாம்பவான்களின் நகைச்சுவைத் தொடர்களை சுட்டியிருக்கிறார். இப்புத்தகத்தையும் நகைச்சுவைத் தொடராக வெளிவர பரிந்துரைப்பதில் நியாயம் இருக்கிறது. இரண்டு கதைகளை படித்துவிட்ட தகுதியுடன் நானும் அவர் கூற்றை வழிமொழிகிறேன்.


3.முன்னுரையில் ஆசிரியர் ஆண் பெண் பாலின பாகுபாட்டு சிந்தனையை அறவே ஒதுக்கி நகைச்சுவைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து இரசிக்க சொல்லியிருப்பது சிறப்பு.


4.முதல் கதை

சுவாரசியமாக நகர்கிறது.

"நாமக் கத்திரிக்காய்" என்ற பெயரை முதல் முறையாக அறிந்து கொண்டேன். ஆசிரியர் கத்திரிக்காயின் அறிவியல் பெயரை ஆராய்ந்து கத்திரிக்காயுடன் நகைச்சுவை என்னும் பருப்பை சேர்த்து கடைந்து காமு சோமு வாயிலாக சுவையான  "கத்திரிக்காய் கூட்டு" தயாரித்து தந்துள்ளார். அவசியம் சுவைக்க வேண்டும்.


5. இரண்டாவது கதை

முதல் கதையை விட என்னை அதிகம் சிரிக்க வைத்தது. குறிப்பாக " ஐய்யய்யோ கேட்டுப்புட்டாளே" என்ற மைண்ட் வாய்ஸ்.. 😀 

மோகன் ஐயா குறிப்பிட்டது போல் மைண்ட் வாய்ஸ் ஒரு தனி கதாப்பாத்திரமாக கதை முழுதும் உலா வந்து சிரிக்க வைக்கிறது.


சில நெருடல்கள்:


காமு  தன் தோழி நேரிலோ  அலைப்பேசியிலோ அழைக்காமலே மற்றொரு தோழி மூலம் வந்த வாய்வழி அழைப்பை வைத்து 

திருமண வரவேற்புக்கு தான் மட்டுமன்றி தன் கணவனையும் அழைத்து செல்வது.. நெருங்கிய நட்பு என்றாலும் இப்படி சரியான அழைப்பு இல்லாமலே சகஜமாக செல்வார்களா என்பது கேள்விக்குறி.

சோமு  தன் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பாலாஜியின் திருமண வரவேற்புக்கு அழையா விருந்தாளிகளாய் காமுவின் தோழியையும் தோழியின் கணவரையும் அழைத்து செல்வது, அவர்களும் மறுக்காமல் உடன் வருவது.


குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது போல நகைச்சுவைக்கு

 " லாஜிக்" தேவையில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.



காமு சோமுவுக்கு

காமாட்சி, சோமசுந்தரம் என சென்ற தலைமுறை பெயர்களை வைத்ததற்கு பதில் இத்தலைமுறைக்கேற்ப காமினி,சோமேஷ்

போன்ற  பெயர்களை வைத்திருக்கலாமோ என்று தோன்றியது.. எனினும் இது ஆசிரியரின் விருப்பம். அதுமட்டுமல்லாமல் நம்மிடையேயும் இளம் தலைமுறையினர்  சிலருக்கு சென்ற தலைமுறை பெயர்கள் உள்ளன. இது கதையை எவ்விதத்திலும் பாதிக்கவும் இல்லை


புத்தகத்தில் அச்சுப்பிழைகள் தவிர்க்க இயலாத ஒன்று. உதாரணத்திற்கு இரண்டாவது கதையில் சோமசுந்தரம் என்ற பெயருக்கு பதில் வேலு என்று அச்சாகி இருக்கிறது. இவற்றை அடுத்த பதிப்பில் சரி செய்யலாம் என்பது என் தாழ்மையான கருத்து. 


அமுதா அக்கா கூறியது போல் ஆங்கிலம் தமிழோடு புத்தகமெங்கும் உறவாடி மகிழ்கிறது. எனினும் இத்தலைமுறை தம்பதிகளின் உரையாடல்கள் பெரும்பாலும் தங்கிலீஷ்  என்பதால் யதார்த்தமாக இருக்கிறது.


மொத்தத்தில் இப்புத்தகம்

அனைவரும் படித்து சிரிக்க

ஒரு நகைச்சுவை விருந்து ..சுவைத்து சிரிக்கலாம் வாங்க😀


விமர்சனம் தொடரலாம்..


பி..கு 

ஆரம்ப காலங்களில் இப்போது எழுதுவதை விடவும் சுமாராகவே எழுதுவேன்.. அப்போதெல்லாம் பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்தியவர் ஸ்ரீவி ஐயா..

வளர்த்த கிடா மார்பில் பாய்ந்ததைப் போல் குறைகளை சுட்ட விமர்சிக்கவில்லை.  மனதில் பட்டதை எழுதியிருக்கிறேன். நிறைகளை நிறை மனதுடன் பகிர்ந்திருக்கிறேன்.தன் விமர்சனத்திற்கும் தன் படைப்புகளுக்கும் உண்மையான விமர்சனங்களை எதிர்நோக்கும்..


- என்றும் சிறியவள் 

சாய்கழல் சங்கீதா


=====================














-----

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...