தபால் பெட்டியும் தபால்காரரும்
தத்தி தத்தி நடக்கையிலே
தாயின் கைப்பற்றி
அஞ்சலகம் போனேன்.
கட்டுகளின் இடுக்கில்
தபால்மாமா தேடித் தந்த
நீலநிறத் தாள்
தலைமகனின் கடிதாசிக்காக
பரிதவித்த என்தாயின்
கண்ணீரில் நனைந்து
அண்ணனின் டவுன்கதை பேசியது
நாட்கள் உருண்டு
சிவப்பு நிற தபால்பெட்டி
எங்கள் வீட்டு புன்னைமரத்தில்
கட்டப்பட்டது.
அன்றிலிருந்து எங்கள் வீடு
போஸ்ட் பாக்ஸ் வீடானது
அப்பெட்டிக்குள்ளே
பேய்கள் உட்கார்ந்து
எல்லா கடிதத்தையும் படிக்கும் என
புரளி கிளப்பினோம்
நண்பர்கள் சிலர் கண்மருள
பயந்து அப்பெட்டியைத்
தொட்டு தொட்டு பார்த்தனர்
தபால்மாமா வந்து
பெட்டி திறக்கும்வரை
மரத்தடியே வீடானது
அவரின் வருகை எங்களுக்கான
கொண்டாட்ட நேரம்
பள்ளி கல்லூரி என
நாங்கள் வளர வளர
தபால்பெட்டியும் இடம்
மாறிக் கொண்டே இருந்தது
விளையாட்டுப் பொருளாகிப் போன
தபால்பெட்டி இன்று
குடும்ப சேதியும் ரகசியமும்
சொல்லும் குடும்ப உறுப்பினராய்
மாறியிருந்தது
ஊரெல்லாம்
பொங்கல் கரும்பு புதுத்துணியென
வண்ணமேறிக் கொண்டிருக்கையிலே
பல ஆண்டுகள் பேசாதிருந்த
மாமனின் பொங்கல் வாழ்த்து மடல்
சட்டென வீட்டில்
ஆனந்த பொங்கலை
அள்ளித் தந்தது
தபால் மாமாவின் கைகளில்
இரண்டு ரூபாய் நோட்டை வைத்து
கண்கலங்கி
என் அம்மா நன்றி சொன்னாள்
அக்கண்ணீரிலே
என் தாய் பிறந்தவீட்டின்
சாயம் ஒட்டியிருந்தது
கல்லூரி தேர்வு விடுதி என நானும்
அச்சிகப்பு பெட்டியுடன்
பேசத்துவங்கியிருந்தேன்
விடுதியிலிருந்து
அனுப்பப்படும் கடிதங்களில்
கண்ணீரும் பிரிவும்
நிறைந்திருந்தது
அப்பாவிடமிருந்து வந்த
கடிதத்தில்
நல விசாரிப்பும் ஊக்குவிப்பும்
உயிர்ப்புடன் இருந்தது
அலைபேசியற்ற அந்நாட்களில்
அனுதினமும் பேசிக்கொள்ளலாம்
கடித எழுத்துகள் வழியே
இன்றைய தொழில்நுட்ப வீரியம்
ஒருபோதும் நிரப்பாது
கடிதங்களின் கனத்தை
தபால்களுக்கு உயிர்கொடுத்த
தபால் பெட்டியும் தபால்காரரும்
தகவல் தொடர்பு வரலாற்றில்
என்றும் நிலைத்திருப்பர்
- ராஜேஸ்வரி.ந,
No comments:
Post a Comment