நற்சுனை- 3
*பழக்க தோஷம்*
நாகரீகம் மாறிப்போச்சு..
இன்னமும் கோயில் மணி கால்சட்டை( Bell-bottom pant)
அணிகிறார் எதிர்த்த வீட்டு மாமா
அடுக்குமாடி குடியிருப்பிலும் மார்கழிக்
கோலத்தின் நடுவே சாண பூமியில் பூசணிப் பூ நட்டு வைக்கிறார் மேல் வீட்டுப் பாட்டி
விலைவாசியெல்லாம்
" விர்"ன்னு ஏறிப் போச்சு..
இன்னமும் முழங்கையைத் தாண்டியே பூ அளக்கிறாள் பூக்காரி பொன்னம்மா
அலைபேசி ஆளும் நகரில்
பழைய ரேடியோ பெட்டியில் தான் இன்றுவரை செய்தி கேட்கிறார் அப்பா..
பனீர் மசாலா செய்யும் போதும் சிட்டிகை பெருங்காயத்தைப்
போட்டுவிடுகிறாள் அம்மா
மூக்குக் கண்ணாடியை கழுத்தருகே மாட்டிக் கொண்டே தேடிக் கொண்டிருப்பாள் அக்கா
என்னுடன் சண்டை போடுவது போல் அடிக்கடி தூக்கத்தில் உளறுகிறாள் தங்கை
வளர்ந்த பின்பும் அம்மாவின் பெரியம்மாவை
"பெரியம்மா" என்றே அழைக்கிறேன் நான்
பாட்டி இறந்த பின்பும்
அவர் பெயரை கூப்பிட்டபடி
தான் எப்பொழுதும் வீட்டுக்குள் நுழைகிறார் தாத்தா
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment