வலை ஒலிபரப்பும் நானும்
--_-----------------------------
சொல் அலையில் கவிதை அலை செய்கிறீர்களா என வித்யா கேட்ட பொழுது...அது முதல் அலையோ...நான் முதல் எலியோ...என்றெல்லாம் யோசிக்காமல்....கரும்பு தின்ன கூலியா என மிக மகிழ்ச்சியாக தலையாட்டினேன். அந்த நாளும் வந்தது...மதிய உணவுக்கு முன் சென்று நாலு கவிதைகளை "சிங் இன் த ரைன்" என வாசித்துவிட்டு வந்துவிடுவோம் என்று... நண்பகலில் அவர் வீட்டு கதவைத் தட்டினேன்.. வலைஒலிக்கென மைக் இருந்தது...ஆனால் சத்தமில்லா இடம் வேண்டுமே ... அது ஒரு சிக்கல்..
அப்போ தான் நாய் குரைக்குது, கார் போகுது, ஹாரன் அடிக்குது...சும்மா 'ஆரம்பமே களை கட்டுது'. சத்தம் கம்மியா கேட்கும் உள்ளறையில் இவ்வளவு அலப்பறை. கதவை சாத்தி திரையை மூடி மைக் செட் பண்ணால்... இட நெருக்கடி ...இருவர் அங்கே இருக்க... 'இது என் ஏரியா உள்ளே வராதே ' அப்படீனு ஒரு வழியா சமாளிச்சு..அப்படி இப்படி எப்படியோ நாற்காலியில் மைக்கோடு உதடுகள் ஒட்டா குறையாக (மைக் அருகில் என்பதை விட மைக் வாயில் இருந்தால் தான் தெளிவாக பதிவாகுமாம்..) நான் உட்கார...வித்யா அருகில் ஒலிப்பதிவுக்காக சமாளித்து நின்றார். பேசச் சொன்னார் வணக்கம் என்றேன். என் குரல் கேட்கவில்லை, வெளியில் இருந்து "விஷுக்" என்று வாகன ஒலி. மடிக்கணினி தன் பங்குக்கு சொன்னதை செய்யாது 'நானும் ரௌடிதான் என்று ' ஒலியை ஸ்பீக்கரா (அ) ஹெட்ஃ போனா என விளையாடிக்கொண்டிருந்தது. "இப்பவே கண்ண கட்டுதே" என்று ...அப்படி இப்படி எப்படியோ மடிகணினியை சரிகட்டி வழிக்கு கொண்டு வந்தோம். அடுத்து கவிதைகள் சொல்லவா என நான் வாயைத் திறந்தால்...இல்ல...ஒன்று முதல் எட்டு வரை சொன்ன பின் தான் ஒவிவாங்கி என் குரலை உள்வாங்குமாம். இது வித்யாவுக்கு சொல்லி வந்த பாடமல்ல...தட்டி தடவி அவராக கற்றுக்கொண்ட வித்தையாம். ஒரு வழியாக "கவிதை என்று எதைச் சொல்வேன்" என்று தொடங்கினால்...சொல்லிடுவியா நீ...என என் தொண்டை கமறியது. தொண்டையை சரி பண்ணிவிட்டு 2 வரி தான்...இப்போ திடீர்னு நாக்கு வம்பு செய்து உச்சரிப்பு குழற...(நாக்குல வசம்ப வச்சு தேய்க்க) ...மறுபடியும் 'முதலில் இருந்தா ' என நான் மலைக்க... ஆரம்பிங்க அமுதா...தப்பு பண்ணால் திரும்ப அதை அப்படியே சரியா வாசிங்க.. நான் எடிட் பண்ணிக்கிறேன் என்று கப கப என பசிக்கும் வயிற்றில் பாலை ஊற்றாமல் ஊற்றினார் வித்யா... இருந்த இடத்தில் எங்கு காகிதத்தை வைத்து படிக்க பார்த்தாலும் 'ஜில் ஜங் ஜக்' னு கண்ணு சுத்துது. தப்பு செய்து அவருக்கு வேலை அதிகம் வைத்திட கூடாது என முடிந்த வரை தவறின்றி பேச முயன்றேன் (பயபுள்ள பொழச்சிட்டு போகட்டும்). அதற்கு அப்புறம் அவர் தன் பகுதி பேசி, பின்புல சத்தங்களை நீக்கி...வெட்டி ஒட்டி...அம்மம்மா...அந்த 5 (அ) பத்து நிமிடம் தேன் போல் நம் காதுகளில் விழும் குரலுக்கு பின் இத்தனை சித்து வேலைகளா? வாரா வாரம் சரியான நேரத்தில் வர வேண்டும் என்றால் "எதயுமே ப்ளான் பண்ணி செய்யனும்". நானோ ...என் பகுதிக்கு மட்டுமே நான் உணவுக்கு முன் என ப்ளான் செய்து தேனீருக்கு முன் வீடு வந்து சேர்ந்தேன்.
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். ஒரு படைப்பாளியின் படைப்புக்கு பின்னால் இருக்கும் வேலைகளை நாம் அறிந்து கொள்வதே இல்லை. சத்தமில்லாமல் ஒரு லைக் போட்டுவிட்டேன் சொல் அலைக்கு மட்டும் அல்ல ... நம் சங்கத்தின் காணொளிகளுக்கும் தான்...
-- அமுதவல்லி
No comments:
Post a Comment