Sunday, August 27, 2023

குழந்தைகளுக்கான பிரத்தியேக பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்




அன்பிற்கினிய நம் உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.


துவக்க விழா முடிந்து இரு மாதங்களே கடந்த நிலையில் நமது சங்கத்தின் இரண்டாவது நிகழ்ச்சியும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.



குழந்தைகளுக்கான பிரத்தியேக பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறப்பாக நடத்தியதன் மூலம் நமது சங்கத்தின் பயணம் வெற்றிப் பாதையில் செல்ல உறுதியான தடம் பதித்து பயணிக்கத் துவங்கியுள்ளது.


நமது திட்டமிடலுக்குப் பின், கடந்த ஒரு மாத காலமாக விழாக் குழுவினர், நமது சங்கத்தின் முன்னோடிகள் *லாவண்யா, மலர்விழி மற்றும் அனிதா* ஆகியோரின் கடின முயற்சி மேற்கொண்டதால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது. விழாக் குழுவிற்கு நெஞ்சுநிறை நன்றிகளும்  உளம் நிறைந்த வாழ்த்துகளும்.


மைகேட், பல்வேறு புலனக் குழுக்கள் மூலம் அறிவிக்கை கொடுத்தாலும், துவக்கத்தில் சிறிது மந்தமாகத்தான் பதிவுகள் இருந்தன. நமது குடியிருப்பு சுதந்திர தின விழாவின் போது நமது சங்கத்தின் ஸ்டால் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதும் சுற்றறிக்கைக் கொடுக்கப் பட்டதும் பரவலாக செய்தி செல்ல ஏதுவானது. நமது விழாக் குழுவினர் எடுத்த தொடர் முயற்சியால் அறுபது பதிவுகள் வந்தன.


கார்ட்ஸ் அறையிலேயே போட்டிகளை நடத்திடலாம் என்று நம்மை எண்ண வைத்த நிலை மாறி, அந்த அறையோடு பன்பயன்பாட்டு பெருவறையையும் சங்கம் முன்பதிவு செய்ய வேண்டிய நிலை உருவானது. இது முதல் வெற்றி.


கால அவகாசம் முடிந்த பின்னும் பல பதிவுகள் தொடர்ந்து வந்த சூழல் இந்நிகழ்வின் வெற்றியை உறுதி செய்தன.


००००००००००००००००००००

*வெற்றிக்கு அடித்தளமிட்ட பூர்வா குடியிருப்பு வாசிகளின் அமோக ஆதரவும் ஒத்துழைப்பும்*

०००००००००००००००००००


இப்போட்டிகளின் நாயகர்கள் குழந்தைகளே! 


துவக்கத்தில், தமிழ்ப்பண் இசைக்கப் பட்ட போது அனைத்துக் குழந்தைகளும் தெளிவாக தமிழ்ப்பண்ணை சேர்ந்திசைந்து பாடியது பெருமகிழ்வைக் கொடுத்தது.


அதன் பின்னர் இரு குழுக்களாக போட்டிகள் நடத்தப் பெற்றன. சிறிய குழந்தைகளுக்கு கார்ட்ஸ் அறையிலும் பெரிய குழந்தைகளுக்கு பன்பயன்பாட்டுப் பெருவறையிலும் போட்டிகள் நடந்தன. மிக ஆர்வமாக 25க்கும் அதிகமான நடுவர்களும் தன்னார்வலர்களும் உதவி செய்தது போட்டிகள் தடையேதுமின்றி திட்டமிட்டபடி நடந்திட மூல காரணமாக இருந்தது.


இதுவரை கேள்விப்படாத, பார்த்திராத, விளையாடியிராத போட்டிகளில் கூட கற்பூர புத்தியோடு விளையாட்டு முறையையும், விதிகளையும் உள்வாங்கிக்கொண்டு சிறார்கள் விளையாடியது பெரியவர்கள் அனைவரையும் ஆச்சரியத்துக்கும் பெரு மகிழ்விற்கும் உள்ளாக்கியது.


குறிப்பாக வினாடி வினாவில் அவர்களின் தமிழ் மொழி அறிவும் ஆளுமை கொள்ளத்தக்க அறிவாற்றலும் மெய் சிலிர்க்க வைத்தது.

பஞ்ச பூதங்களை ஒரு குழந்தை படபடவென கூறியது, தமிழ் மாதங்களைத் தங்கு தடையின்றி பல குழந்தைகள் புயல் வேகத்தில் உரைத்தது, வார்த்தை தேடலில் 18 குழந்தைகள் அனைத்து வார்த்தைகளையும் கண்டு பிடித்து தவறின்றி எழுதியது, விடுகதைகளின் முடிச்சினை லாவகமாக அவிழ்த்து விடை பகன்றது என குட்டிகள் எல்லாம் கலக்கோ கலக்கு என கலக்கின.


இறுதியாக, 

அனைத்துக் குழந்தைகளுக்கும் பங்கேற்றதற்காக தங்க மெடல் ஒன்றும், பள்ளிக்கு எடுத்துச் செல்ல உணவு பாத்திரம் (Tiffin box) ஒன்றும் (ஜெகன் ஐயாதான் இதற்குப் புரவலர்) வழங்கப் பட்டது.


நடைபெற்ற ஏழு போட்டிகளிலும் முதலாம் இரண்டாம் இடங்கள் பெற்ற குழந்தைகளுக்கான தங்கம்/வெள்ளிப் பதக்கங்கள் நமது சங்கத்தின் அடுத்த பொதுக் குழு கூட்டத்தில் கொடுக்கப் படும்.

(வெற்றியாளர் பட்டியல் தனியே இணைக்கப் பட்டுள்ளது) 


இறுதியில் அனைவரின், குறிப்பாக குழந்தைகளின் உற்சாகக் குரலினில் தேசியப் பண் இசைக்கப்பட்டது.


*உளமார்ந்த நன்றிகள்*







★ விழாக்குழுவினைத் திறம்பட இயக்கி வெற்றி கரமாக போட்டிகளை நடத்தி வெற்றிவாகை சூடிய முப்பெருந் தேவியர்

*லாவண்யா*

*அனிதா பாரதி*

*மலர்விழி*

ஆகியோருக்கு.


★ அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி தங்கள் விளையாட்டு ஆர்வத்தையும் தமிழ் ஆர்வத்தையும் வெளிக் காட்டிய அத்துனை இளஞ்சிட்டுகளுக்கும்


★ தங்கள் குழந்தைகளை ஆர்வமாகப் பங்கேற்க வைத்த பெற்றோர்கள் அனைவருக்கும்.


★ தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி இந்தப் போட்டிகளின் வெற்றிக்கு ஒத்துழைத்த நடுவர் பெருமக்கள், தன்னார்வலர்கள் (பட்டியல் தனியே வெளியிடப் படும் சிறப்பு நன்றிகளோடு) அனைவருக்கும்.


★ தனது வருகையால் விழாவை சிறப்பித்ததோடு, குழந்தைகளுக்கு வாழ்த்து கூறும் வகையில் உரையாற்றி, தனது கரங்களால் மெடல்கள் வழங்கி நம் சங்கத்திற்கு பெருமை சேர்த்த திரு. ஹரிஹர சுப்ரமணியன் (நம் நலச் சங்க தலைவர்) ஐயா அவர்களுக்கு.


ஓர் அன்பு வேண்டுகோள்:


நம் சங்கத்தினில் உறுப்பினராக இணைய விருப்பமுள்ளோர் தயைகூர்ந்து தொடர்பு கொள்க. அப்படி விருப்பமுள்ளோரை இச்சங்க உறுப்பினர்கள் கண்டறிந்து உதவிடுக.


நன்றி🙏

[27/08/2023, 4:18 pm] SriV: நடுவர்களாக, தன்னார்வலர்களாக இருந்து வெற்றிக்கு உதவியவர்கள்:


(சிறிய குழந்தைகள் போட்டி)

தேவிகா 

சுகன்யா

உமா

சரண்யா

கிருத்திகா

பாரதி

சத்யா

பிரபு குமாரி

சுபாஷிணி

பாவ்யா

நளாயினி

தியாகராஜன் அய்யா சாந்தி,

சுசீலா.


(பெரிய குழந்தைகள் போட்டி)

மல்லிகா

விஜயலக்ஷ்மி 

துர்கா

ஹரிஷ்

திருமிழிசை ஸ்ரீனிவாசன்

நாகராஜன் (கோவில் நிர்வாகக் குழு)

சுந்தரம்

அரவிந்த்-லக்ஷ்மி-

நாராயணன் 

மோகன்

பாலமுரளி 

கீதா

லலிதா

திருமதி காமாக்ஷி ,அவரது கணவர் நாகராஜன்,

புவனா

ஆர் .சுப்ரமணியம் 

அரவிந்த்

பாலாஜி


இவர்களின் பங்களிப்பே விழாவின் வெற்றிக்கு பலம் வாய்ந்த எஃகுத் தூண்களாயிருந்தன.


இவர்களுக்கு நமது உளமார்ந்த நன்றிகள்.

பலரும் இதில் தவிர்க்க இயலா பணிகளைத் துறந்து வந்திருப்பர். அலுவலக/இல்லத்து/ பிற கடமைகள் அவர்களுக்கு நிச்சயம் இருந்திருக்கும். அவற்றோடு நம் சங்க நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்த இவர்களால்தான் இவ்வெற்றியினை நாம் ஈட்டியுள்ளோம்.

குறிப்பாக இளவல் லக்ஷ்மி நாராயணன் - அலுவலகப் பணி அவரை இன்று விடிகாலை நான்கு மணி வரை அழுத்தி வைத்தாலும் உடற்சோர்வினை புறந்தள்ளி வந்து உதவியது குறிப்பிடத்தக்கது. இதுபோல பலருக்கும் பணிச்சுமை இருந்திருக்கும்.


அவற்றோடு நமது பூர்வா~பாரதி தமிழ்ச் சங்க நிகழ்வுகளும் முக்கியமே என வந்து பங்களித்து அனைத்து நல்லிதயங்களுக்கும் கோடானு கோடி நன்றி!


எவரது பெயராவது எங்களது கவனக் குறைவால் விடுபட்டுப் போயிருப்பின் பொருத்தருள்க தோழமைகளே! சுட்டியும் காட்டுக


*உங்கள் தோழன் ஸ்ரீவி*

*தலைவர்*

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...