Sunday, July 16, 2023

பூர்வா~பாரதி தமிழ்ச்சங்கத்தின் துவக்க விழா


பூர்வா~பாரதி தமிழ்ச்சங்கத்தின் துவக்க விழா 



 

*உவகையளித்த வெற்றி!*

*உற்சாகந்தந்த வெற்றி!!*

*ஊக்கங் கொடுக்கும் வெற்றி!!!*


*பூர்வா~பாரதி தமிழ்ச்சங்கத்தின் துவக்க விழா இமாலய வெற்றி!!*


தமிழ் நல்லுறவுகளுக்கு,


நல் வணக்கம்.


14~4~23 அன்று நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் மூன்றுமாத கால அவகாசத்தில் நமது பூர்வா~பாரதி தமிழ்ச் சங்கத்தின் *துவக்க விழா 16~7~23, ஞாயிறு காலை பத்து மணிக்கு* நமது பன்னோக்கு பெருவறையில் கோலாகலமாக நடைபெற்றது. காலை பத்து மணிக்கே அரங்கம் நிரம்பி வழிந்தது. பாரதியின் கம்பீரமான படத்துடன் கூடிய பதாகை அரங்கத்துக்கு மெருகேற்றியது. அரங்கத்தின் பக்கச் சுவர்களில் பாரதியின் உருவத்துடன் அவரது பாடல் வரிகள் கூடிய வண்ணமய சுவரொட்டிகள் அனைவரின் கருத்தையும் கவர்ந்தன.


வாயிலில் சிறுமியர் சாதனாஸ்ரீ மற்றும் அபிராமி ஆகியோர் திருமதி அனிதா பாரதி தலைமையில் மலர்ந்த முகத்துடன் பன்னீர் தெளித்து, சந்தனம் கொடுத்து, இனிப்புகள் மற்றும் கற்கண்டு வழங்கி வந்தோருக்கு முகமன் கூறி வரவேற்றனர். 


வருகைப் பதிவேடு, தமிழ் உறவு அறியும் படிவம், உறுப்பினர் அட்டை வழங்குதல் ஆகியவற்றின் பொறுப்பாளர்களாக வெ. ராமசாமி ஐயா, இளவல்கள் லக்ஷ்மி நாராயணன், செல்வா ஆகியோர் வரவேற்புக் குழுவில் சிறப்புற பணியாற்றினர்.

காலை முதலே திவாகர், நாகராஜ், சுந்தரம், பாலமுரளி போன்றோரின் களப்பணியால் அரங்கம் மிளிரலானது.


 முதல் நிகழ்ச்சியாக ஐந்து மூத்த பெண்மணிகளை நமது தொகுப்பாளினி திருமதி. மலர்விழி அழைத்திட, 

மூத்த பெண்மணியர்


திருமதிகள்

கல்யாணி,

ஹேமா வெங்கட்ராமன்,

பிச்சையம்மா,

கிரிஜா ஞானேஸ்வரன்,

இந்துமதி


ஆகியோர்

மேடையேறி குத்து விளக்கேற்றி மங்கலகரமாகத் துவக்கி வைத்தனர் விழாவினை.


விளக்கேற்றியதும் திருமதி விஜயலக்ஷ்மி தலைமையில் சிறுமிகள் அறுவர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பண்ணிசைத்தனர்


 பின்னர், திருமதி ல. லாவண்யா அவர்கள் வரவேற்புரை நல்கினார். *குறுநகைத் தமிழ் புலனக்குழு* வாகத் துவங்கி அடுத்தடுத்து நடந்த செயற்குழுக் கூட்டங்களிலே விவாதித்து முடிவெடுக்கப்பட்டு *பூர்வா~பாரதி தமிழ்ச்சங்கம்* உருவான வரலாற்று நிகழ்வினைக் கோடிட்டுக் காட்டியதோடு, மிகச் சிறப்பான முறையில் சிறப்பு விருந்தினர்கள் *திரு. பத்ரி (இயக்குநர்), திரு. காதல்மதி (கவிஞர்) மற்றும் திருமதி. உமாபாரதி (கவிதாயினி)* ஆகியோரைத் தகுந்த அறிமுகத்தோடு வரவேற்றார்.


அதன் பின், திரு. ஜெ. ஸ்ரீவெங்கடேஷ் தலைமையுரையாற்றினார். திருவாளர்கள் ஜெகன்னாதன் மற்றும் சாய்ராம் அவர்கள் வழிகாட்டி உறுதுணையாய் நின்றிட புலனக் குழுவாய் தோன்றி தமிழ்ச்சங்கமாய் மலர்ந்ததைக் கூறியதோடு *பூர்வாவில் தமிழ் மணம் கமழ,* *இளைய தலைமுறைக்கு தமிழில் எழுதப் படிக்க உறவாட கற்பித்தல்*, *இரு மாதங்களுக்கொரு முறை கலை நிகழ்ச்சிகள் நடத்துதல்,இடையில் செயற்குழு கூடுதல், உறுப்பினர் சேர்த்தல்*

எனும் உடனடித் திட்டங்களோடு *இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் சென்னையில் தமிழ்ப்பணியாற்றும் அமைப்புகளின் வரைபடத்தில் முக்கிய இடம் வகிக்கும் நிலையை அடைவது இலக்கு* என உறுதியோடு  கூறினார்.


*கலைநிகழ்ச்சிகளின் வண்ணமயத் துவக்கம்*


முதலில் பூர்வாவின் இன்னிசைக் குயில் திருமதி விஜயலக்ஷ்மி பாலாஜி தனது இனிய குரல் வளத்தால் பாரதியின் 'வெள்ளைக் கமலத்தில்...' - பாடலைப் பாடி மகிழ்வூட்டினார். கலை நிகழ்ச்சிகளின் துவக்கமே களை கட்டியது.


பிறகு, வண்ண வண்ண சுழல் விளக்குகள் சுழன்றாட அதனை விஞ்சும் வகையில் சுழன்றாடி பாரதியின் பாடலுக்கு ஆடி தனது அபிநயங்களால் அரங்கத்தைத் தன்வயப் படுத்தினார் பூர்வாவின் நாட்டியப் பேரொளி திருமதி. ஸ்ரீநிதி வெங்கடேஷ் அவர்கள்


அதன் பின்னர்,


திரு ஜெ. ஸ்ரீவெங்கடேஷ் நடுவராக அமர்ந்த பட்டிமன்றத்தில்


◆ *'பாரதி ஒரு தேசியக் கவியே'* - எனும் அணியில் திருவாளர்கள். சு.தே. நாகராஜ் (தலைமை),

சி. ஹரீஷ், வெ. பாலமுரளி ஆகியோர்

பங்கேற்க,


◆ *'பாரதி அறநெறி கூறிய தமிழ்க் கவியே'* - எனும் அணிக்கு திரு. திருவீழிமிழலை ஸ்ரீனிவாசன் (தலைமை),

திருமதி. ஏ. மலர்விழி,

திருமதி ல. லாவண்யா ஆகியோர் பங்கேற்க. 


சிறப்பானதொரு பட்டிமன்றம் அரங்கேறியது. விவாதங்களின் போது அரங்கம் அதிரும் கரவொலிகள் அடிக்கடி வந்தது பார்வையாளர்கள் முழுமையாக ரசித்தார்கள் எனக் கட்டியங் கூறியது.


பாரதியாரின் பாடல்களை இளந்தளிர்கள் தங்கள் யாழொத்த குரலில் பாடி அவையை மகிழ்வின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றனர்.  பாடிய குழந்தைகள் விவரம்:


அனன்யா திவாகர் & ஆர். ஆராதனா : தேடி உன்னை சரண் அடைந்தேன்


நிதிகா பாலாஜி - மனதில் உறுதி வேண்டும்


சஹானா - காக்கைச் சிறகினிலே


மேகனா & காயத்ரி - பாயும் ஒளி நீயெனக்கு


ஆடல் நிகழ்ச்சி வண்ண விளக்குகளின் சுழற்சியோடு பார்வையாளரின் கண்ணையும் கருத்தையும் ஒருச்கே கவர்ந்தன. அதன் விவரம்:


◆ ஸ்ரீநிதி: சின்னஞ்சிறு கிளியே


◆ தியாரா, அத்விகா, தீக்ஷா : தீராத விளையாட்டுப் பிள்ளை


◆ அத்விகா, ஸ்ருஷ்டி, ஆராத்யா, நித்யஸ்ரீ, காவ்யா - ஆடுகிறான் கண்ணன் (பத்ரி/காதல்மதி)


◆ தி. காவ்யா - பாருக்குள்ளே நல்ல நாட 


திருமதி. உமாபாரதி அவர்கள் பாரதி மற்றும் பரிதிமாற் கலைஞர் ஆகிய குடும்பங்களின் வழித்தோன்றல். அவர்தம் சிறப்புரையில் பாரதியார் வாழ்வில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டினார். நமது சங்கத்தின் துவக்க விழாவின் ஏற்பாடுகளைப் பாராட்டியதோடு நமது பணி சிறக்க வாழ்த்தினார்.


திரு. காதல்மதி, நான்காயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய பாடலாசிரியர். நமது சங்கத்தை, துவக்க விழாவை வாழ்த்தி கவிதை ஒன்றினை வாசித்தளித்தார். நம்மிடையே கவிதை எழுதும் வல்லமை படைத்தோர் உள்ளதறிந்து உளமாற வாழ்த்தினார்.


பின்னர்,

பங்கற்ற சிறார்கள்,

பட்டி மன்றப் பேச்சாளர்கள், பயிற்சி அளித்த ஆசிரியர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோருக்கு நினைவுப் பொருட்கள் திரு. பத்ரி அவர்களால் வழங்கப் பட்டது. பங்கேற்பாளர்களுக்கு நற்சான்றிதழும் வழங்கப் பட்டது. சிறார்களுக்குக் கூடுதலாக திரு. ஜெகன்னாதன் மற்றும் திரு. தியாகராஜன் ஆகியோர் சார்பில் பரிசுப் பொருட்களும் வழங்கப் பட்டன.


திரு. பத்ரி தனது சிறப்புரையில் நம்மை வாழ்த்தியதோடு தமிழ்ப் புத்தகங்கள் வாங்கலின் - வாசித்தலின் அவசியத்தை வலியுறுத்தினார். தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்ற பொக்கிஷங்களின் மகத்துவத்தை விளக்கினார். அவையின் கவனம் முழுவதையும் தன்பால் ஈர்த்ததோடு நமது செயல்பாடுகள் செழிப்புற நல்ல ஆலோசனைகளை வழங்கினார்.


இறுதியாக, நம் பூர்வாவின் எம்.ஜி.ஆர். திரு. சாய்ராம் அவர்கள் நன்றியுரை நவின்றார். எதிர்கால நடவடிக்கைகள் சிறப்புற நமது செயல்பாடுகள் தொடர வேண்டுமென வலியுறுத்தினார்.


விழா இனிதே முடிந்தது.


விழாவின் சிறப்பம்சங்கள்:


★ பாரதி குடும்பத்திலிருந்து ஒருவர், திருமதி. உமாபாரதி அவர்கள் வந்து வாழ்த்தியதும்


★ பாரதி மறைந்த பின் அவரது குடும்பத்திற்கு 33 வருடங்கள் பொருளுதவி செய்த திரு. காமு ரெட்டியார் குடும்பத்திலிருந்து ஒருவர், திரு. காமேஸ்வரன் பாப்பரெட்டி, நம் பூர்வாவில் குடியிருப்பவர் வந்திருந்ததும்


துவக்க விழா எனும் மணிமகுடத்தில் மின்னுகின்ற வைரங்களே!


திரு. காமேஸ்வரன் அவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவித்து மகிழ்ந்தோம்.


★ அரங்கம் நிரம்பி வழிந்ததோடு மூன்றரை மணி நேரமும் அநேகர் நின்று கொண்டே இருந்தது விழாவிற்கு நம் குடியிருப்புவாசிகளின் அமோக ஆதரவினை வெளிப்படுத்தியது.


★ பலர் சங்கத்தில் இணைய விழைந்திருப்பது வெற்றிப்படிக் கட்டில் நமது சங்கம் முன்னேறுகிறது என்பதன் அடையாளமாகத் திகழ்கிறது.


★ எண்ணற்ற தன்னார்வலர்களின் தன்னிகரற்ற களப்பணியால் துவக்க விழா மாபெரும் வெற்றியை ஈட்டியது. 


சிறப்பு நன்றிகள்:


★ துவக்க விழாவிற்கு ௹30,000/- நிதியளித்த திரு ஆர். வெங்கடேஷ் (குருராம் ஃபைனான்ஸ் நிறுவனர்) 


★ சிற்றண்டி/தேநீர்/குடிநீர் வழங்கிய திரு. மணீஷ் (க்வாலிட்டி பைட்ஸ் நிறுவனர்)


★ சால்வை/பாரதி புத்தகங்கள் வழங்கிய திரு. பாலமுரளி (நலச்சங்க உதவித் தலைவர்)


ஆகியோருக்கு  சால்வை அணிவித்து 

நினைவுப் பரிசுகள் வழங்கப் பட்டன


 என் தனிப்பட்ட நன்றிகள்:


★ கரந் தன்னில் எலும்பு முறிவு இருந்த போதும் அழைப்பிதழ் வடிவமைத்ததோடு, விழாவில் களப்பணி ஆற்றிய ராம் ப்ரசாத்


★ இமைப் பொழுதும் சோராது பல ஆயத்தப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சகோதரி லாவண்யா


★ எஃகுத் தூண்களாய் உடனிருந்து வலிமை சேர்த்த என் உடன்பிறவா மூத்த சகோதரர்கள் ஜெகன் ஐயா மற்றும் சாய் அண்ணா


★ சில நாட்கள் முன்னே களமிறங்கினாலும் அடித்து தனது தமிழ் உச்சரிப்பால் அமர்க்களமாய் ஆடி நிலைத்து நின்ற அ. மலர்விழி


★ தன்னார்வத்துடன் களப்பணியாற்றிய அனைத்து அன்பு நெஞ்சங்கள்


★ நம் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் மற்றும் அன்புத் தமிழ் நெஞ்சங்கள்


★ மிகச் சிறப்பாக நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கிய திருமதி. லாவண்யா

மற்றும் மலர்விழி.


எவரது பெயரையாவது குறிப்பிட விட்டிருப்பின் பொருத்தருள்க தோழமைகளே!

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...