எனக்கு விவரம் தெரிந்த பின்
பார்த்த சென்னை:
1967 ஆம் வருடம்.
நான் ஏழாம் வகுப்பு
படித்துக் கொண்டிருந்தேன்.
சென்னையில் எக்ஸ்போ 67 என்ற ஒரு உலகப் பொருட்காட்சி.
அதனைக் காண்பதற்கு என் தந்தை என் அக்கா வீட்டுக்காரருடன் (நாங்கள் அவரை மச்சான் என்று அழைப்போம்) அனுப்பி வைத்தார்.
மணப்பாறையில் இருந்து தூத்துக்குடி சென்னை விரைவுப் புகைவண்டியில் இரவுப் பயணம். அப்போதெல்லாம் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகள்ஒரு புகைவண்டியில்இரண்டுதான் இருக்கும்.
பதிவில்லாப் பெட்டியில்தான் என் பயணம்.
எந்த புகைவண்டி நிலையத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைத்துவிடும்.
இரு இருக்கைகளுக்கு
இடையில் போர்வையை விரித்துக் கீழே படுத்துக் கொள்ளலாம் (வாய்ப்பிருந்தால்).
காலையில் கரி பூசிய முகத்துடன்
தாம்பரத்தில் இறங்கினோம்.
தாம்பரம் இரயில் நிலையத்தை ஒட்டியே உறவினர் ஒருவர் தங்கி இருந்தார். அவருடன் நாங்களும்
தங்கினோம்.
அவர் எரிந்த புகைவண்டிக் கரியை ஏலத்தில் எடுத்து வியாபாரம் செய்து வந்தார். எனவே அவருக்கு தாம்பரம் புகைவண்டி நிலையத்தில் மிகுந்த மரியாதை.
எங்களுக்கு குளிக்க வெந்நீர் இரயில் இஞ்சினில் இருந்து சுடச்சுட இரும்பு வாளியில் தினமும் கிடைத்தது.
குளித்து உறவினர் அளித்த சிற்றுண்டியை அருந்தியதும்
மின்சார வண்டிப் பயணம்.
பொருட்காட்சி தற்போதைய
அண்ணா நகரில் நடந்தது.
அன்று அண்ணா நகர் வெறும்
பொட்டல் காடு.
இப்போதுள்ள அண்ணா நகர் கோபுரம் (டவர்)பொருட்காட்சிக்காக கட்டப்பட்டதாகும். மின்துக்கியில்
மேலே அழைத்துச் சென்று
சறுக்கும் படிக்கட்டுகளில்
கீழே அனுப்பினார்கள்.
"கலாட்டக் கல்யாணம்" படத்தில் வரும் எங்கள் கல்யாணம் கலாட்டாக் கல்யாணம் பாடல் படமாக்கப் பட்டது
அந்தப் பொருட்காட்சியில்தான்.
பொருட்காட்சியில் நிறைய அரங்குகள். அனைத்தும் இயந்திரங்கள்.
என் இள வயது காரணமாக என்னைக் கவரவில்லை.
நான் முதன்முதலில்
தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்தது அங்கிருந்த ஒர் அரங்கில்தான்.
தொலைக்காட்சிப்பெட்டியில் ஒரு பெண் பரத நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்ததும் பக்கவாட்டில் இருந்த திரை விலக்கப்பட்டு அந்தப் பெண் எங்கள் எதிரே நிஜமாக மேடையில் ஆடிக் கொண்டிருந்தார்.
அதை ஒளிப்பதிவுக் கருவி மூலம் படம் பிடித்து தொலைக்காட்சியில்
ஒளி பரப்பிக் கொண்டிருந்தனர்.
கூடியிருந்த நாங்கள் வாய் பிளந்து
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அடுத்தடுத்த நாட்களில் விமான நிலையம்,
செத்த காலேஜ் (மியூசியம்),
உயிர் காலேஜ் (மிருகக்காட்சிசாலை)
(அன்று மிருகக்காட்சிசாலை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் இருந்தது),
மெரீனா கடற்கரை என்று ஐந்து நாட்கள் ஓடியது தெரியவில்லை.
அன்றைய சென்னைக்கும்
இன்றைய சென்னைக்கும்
மலைக்கும் மடுவுக்கும் உள்ள
வேறுபாடு.
சென்னையைப் பற்றி எழுத
எண்ணிய என் பதிவு
பசுமாட்டைத் தென்னை
மரத்தில் கட்டிய கதையாக
முடிந்து விட்டது.
- முகம்மது சுலைமான்
No comments:
Post a Comment