०००००००००००००००००००
ஆலோசனைக் கூட்ட
விவரணம்
००००००००००००००००००००
நமது குழுவின் இரண்டாவது கூட்டம் 7~5~23 அன்று சி20-103, திரு. ஸ்ரீவெங்கடேஷ் இல்லத்தில் நடைபெற்றது.
மூத்தவர் திருவீழிமிழலை ஸ்ரீனிவாசன் ஐயா தலைமையில் தமிழ்த் தாய் வாழ்த்தோடு கூட்டம் துவங்கியது.
ஐயாவின் தலைமை உரைக்குப் பின் இளையவர் ஹரீஷ் வரவேற்புரை நல்கினார்.
பின்னர், முந்தைய அறிமுகக் கூட்டத்தின் (14.4.23) விவரணங்கள் (இக்குழுவில் பகிரப்பட்டது) அவையின் ஒப்புதலுக்காக முன் வைக்கப் பட்டு அவையோரால் முழுமனதாக ஏற்கப் பட்டது.
அதன்பின், நிகழ்ச்சி நிரலின் படி குழு அமைப்பாளர் திரு.ஸ்ரீவெங்கடேஷ் உதயமாகியுள்ள நமது தமிழ்ச்சங்கத்திற்கு இக்குழுவில் நடத்தப் பட்ட கணிப்பின் அடிப்படையில் பெருவாரியான உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்ட "பூர்வா - பாரதி தமிழ்ச் சங்கம்" - எனும் பெயரை முன்மொழிந்ததும் அவையின் ஒப்புதல் கோரப் பட்டது. விவாதங்கள் நடந்தேறிய பின் இப்பெயரே ஒருமனதாக அவையினரால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
பிறகு, முக்கிய பொருளான சங்க துவக்கவிழா குறித்த அமைப்பாளர்களின் கீழ்க்கண்ட ஆலோசனைகளை அமைப்பாளர் பட்டியலிட்டார்:
~ 9-7-23 ஞாயிறு அன்று துவக்க விழா நடத்துவது
~ நமது பன்னோக்குப் பெருவரங்கில் நடத்துதல்
~ சிறப்பு விருந்தினர்களாக திருவாளர்கள் பத்ரி (இயக்குநர்) காதல்மதி (கவிஞர்) ஆகியோர் வர இசைந்துள்ளனர். இதற்கு முயற்சி மேற்கொண்டவர் திரு. சாய்ராம்
~ நம் குடியிருப்பில் இருப்போர் மட்டும் பங்கேற்கும்
◆ நடன நிகழ்ச்சி (நடன ஆசிரியர் மற்றும் குழந்தைகள்)
◆குழந்தைகளுக்கான
பாடல் நிகழ்ச்சி (பாரதியார் பாடல்கள்)
◆ இளையோர் + பெரியவர்கள் கலந்து கொள்ளும் பட்டி மன்றம்
◆ சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரை.
என்கிற முன்வரைவு ஒப்புதலுக்காக முன் வைக்கப் பட்டது.
நிதியைப் பொருத்தளவில் புரவலர்கள் இருப்பின் (sponsors) அவர்கள் மூலமோ அல்லது நமது உறுப்பினர்கள் ஆளுக்கு ஆயிரம் ௹. வழங்குவது என்றும் தோராயமாக துவக்க விழாவிற்கு ஆகக் கூடிய ௹.30,000- தொகையை சந்திப்பது என்றும் ஆலோசனை முன்மொழியப் பட்டது.
அறிமுகக் கூட்டத்துக்குப் பின் புதிதாக இணைந்துள்ள திருவாளர்கள் தியாகராஜன் (பல ஆய்வுப் பதிவுகளை இக்குழுவில் இடுபவர்) நாகராஜன் (ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்) திருமதி உஷாதேவி ஆகியோரின் அறிமுகங்களுக்குப் பின், ஆழமான விவாதங்கள் நடைபெற்றுக் கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப் பட்டன:
● துவக்க விழா 16~7~23, ஞாயிறு அன்று
● பன்னோக்கு பெருவரங்கு (Multi purpose hall) முன்பதிவு செய்தல்
● மாதம் ஒருமுறை குடியிருப்போர் பங்கேற்கும் பல் வேறு நிகழ்ச்சிகளை (வினாடி வினா, கருத்துரைகள், குறுக்கெழுத்துப் போட்டி, இலக்கியப் பேருரைகள், விவாத மேடைகள்) நடத்துவது.
● நம் உறுப்பினர் திரு. ஆர். வெங்கடேஷ் முழு செலவையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்ததால் உறுப்பினர்கள் தரும் தொகையை சங்கத்தின் "நிதிய மூலதனமாக" (Corpus fund) வைத்துக் கொள்வது. எதிர்கால நடவடிக்கைகளுக்குப் பயன் படுத்துவது. புரவலரின் அலுவலக விளம்பரங்களை அரங்கில் வைப்பது.
● நம் குடியிருப்பில் இருக்கும் நடன ஆசிரியை ஸ்ரீநிதி மூலம் நடன நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது.
● பாடல் நிகழ்ச்சியில் நம் குடியிருப்பில் இருக்கும் குழந்தைகளை, கற்றுக் கொடுப்போர் மூலம் கண்டறிந்து திரு. சாய்ராம் ஐயா மூலம் ஒருங்கிணைப்பது.
● ஒவ்வொரு நிகழ்ச்சி நடந்தவுடன் ஓரிரு நாட்களில் வரவு செலவு கணக்குகளை குழுவில் தகுந்த ஆவணங்களின் நகலுடன் பகிர்வது. வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது.
இறுதியாக திரு. ஆர். மோகன் ஐயா அவர்கள் நன்றி நவில, கூட்டம் இனிதே முடிவுற்றது.
*உங்கள் தோழன் ஸ்ரீவி*