◆●◆●◆●◆●◆●◆●◆●◆●■●
நிர்வாகக் குழு கூடுகை. 4 :
விவரணம்
◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●
அனைவருக்கும் வணக்கம்.
நமது நிர்வாகக் குழுவின் நான்காம் கூடுகை 6~1~2024 சனி மாலை ஆறுமணிக்கு க்ளப் ஹவுஸ் கார்ட்ஸ் அறையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக எட்டிலிருந்து எண்பது வரை நிகழ்ச்சியின் பாடகர்களும் வரவிருக்கும் பட்டிமன்றத்தில் பேசிட விருப்பம் தெரிவித்த பேச்சாளர்களும் அழைக்கப் பட்டிருந்தனர்.
பூர்வா~பாரதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஜெ. ஸ்ரீவெங்கடேஷ் தலைமை தாங்கினார்.
அனைவரின் குரலில் தமிழ்ப்பண் ஒலித்தததும் கூட்டம் துவங்கியது.
திருமதி. வித்யா அவர்கள் வரவேற்புரை நல்கினார்.
பிறகு தலைவர் நிகழ்ச்சிநிரல் ஒப்புதல் பெற்று, முதலாவதாக 'எட்டிவிருந்து எண்பது வரை' பரிசீலனை மீதான விவாதத்தைத் துவக்கினார்.
அதன் மீதான விவாதத்தில் பார்வையாளர்களாக கலந்து கொண்ட நான்கு உறுப்பினர்களையும் சேர்த்து அனைவரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்தனர்.
அனைவரின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்நிகழ்ச்சியைப் பற்றி தங்களது மகிழ்வினை அனைவரும் பகிர்ந்தனர். கீழ்க்கண்ட தவறுகளும்/ஆலோசனைகளும் சுட்டிக் காட்டப்/வழங்கப் பட்டன
௧] பயிற்சியாளர்களுக்கு வழங்கப் பட்ட நினைவுப் பரிசினை செல்வன் ஐயா பேசிய பின் அனைத்துப் பாடகர்களும் மேடையேறி வழங்கிடுவதாக இருந்தது நடைபெறாமல் போனது. - இதற்கு தலைவர் பொறுப்பேற்று தன்னிலை விளக்கம் அளித்தார்.
௨] குடிநீர் வழங்காமை (வருங்காலத்தில் வழங்கப் படும்)
௩] அனைவருக்கும் கழுத்துப் பட்டை (Tag) வழங்கல் - (நிர்வாகக் குழு/தன்னார்வலர்கள் மட்டும் கழுத்துப் பட்டை அணிய இயலும் என தலைவர் விளக்கினார்)
௪] வழங்கப்படும் அன்புப் பரிசுகளில் நமது இலச்சினை (LOGO) இடுதல் (ஏற்கப் பட்டது)
௫] அன்புப் பரிசு புத்தகங்களாக இருத்தல் (ஏற்கப் பட்டது)
இதன்பின், ஆர். மகாலக்ஷ்மி அவர்கள் திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதிய 'பனி மனிதன்' நாவல் பற்றிய சிறப்பானதொரு அறிமுக உரை ஆற்றினார். அனைவரையும் அந்த விஞ்ஞான புதினத்தை வாங்கிப் படிக்கும் ஆர்வத்தை அவரது எளிய ஆனால் கேட்போரை ஈர்க்கும் உரை உருவாக்கியது. அவருக்கு நமது நன்றிகள் பற்பல🙏
அவரது தமிழ்ப்பணி மேன்மேலும் தொடர நமது நல் வாழ்த்துகள்!
பிறகு, ஜன. 21 நடைபெறவுள்ள பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி பற்றிய விவரங்களைத் தலைவர் விவரித்தார்.
★ அரங்கு பதிவு செய்ய மின்னஞ்சல் அனுப்பப் பட்டது.
★ திருமதி. கிரிஜா அவர்களின் வீணைக் கச்சேரி (திரைப்படப் பாடல்கள்) - 30 நிமி
★ பட்டிமன்றம் (17 நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் பேச்சாளர் தேர்வு நடத்தி 6 அல்லது 8 நபர்கள் தேர்வுசெய்யப் படுவர். அவர்களுக்கென ஒரு புலனக் குழு உருவாக்கப் பட்டுள்ளது) - 1 மணி நேரம்
★ திரு. மொகம்மது சுலைமான் அவர்களின் நகைச்சுவை உரை -
5 நிமி
★ நமது படைப்பாளிகள் சிலரின் கவிதை அரங்கேற்றம் (பொங்கல் விழா பற்றி) - 15~20 நிமி.
இவை அனைத்தையும் அவை ஒருமனதாக ஏற்றது.
பிறகு, தலைவர் மற்றும் நிதிச் செயலர் அவர்கள் முன்வைத்த உறுப்பினர் சேர்க்கை / சந்தா வசூல் / நிதி நிலை பற்றி விவாதம் நடந்த பின், கீழ்க் கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப் பட்டன:
● இனிமேல் சந்தாதாரர்கள் மட்டுமே உறுப்பினர்களாகக் கருதப் படுவார்கள். புலனக் குழுவில் மட்டும் இருந்து சந்தா செலுத்தாதோர் சங்க உறுப்பினர்களாகக் கருதப் பட மாட்டார்கள்.
● இனி அனைத்து நிகழ்ச்சிகளில் கலந்த கொள்ளவோ/பார்வையாளர்களாக இருக்கவோ சந்தாதாரர்கள் மட்டுமே உரிமை பெற்றவர்கள். பிறருக்கு அனுமதி இல்லை.
● மார்ச் 31-க்குப் பிறகு சந்தா செலுத்தாதோர் சங்கக் குழுவிலிருந்து நீக்கப் படுவார்கள்.
● பூர்வாவுக்கு வெளியே உள்ளோர் சிலர் உறுப்பினராக விழைவு தெரிவித்த பின்னணியில், அது குறித்த விவாதத்தினை ஆண்டுவிழா முடிந்த பின் வைத்துக் கொள்ளலாம் என முடிவானது.
இறுதியாக, திருமதி விஜயலக்ஷ்மி பாலாஜி அவர்கள் நன்றியுரை கூறினர்.
தேசியப் பண்ணோடு கூடுகை இனிதே முடிந்தது.
குறிப்பு: நேற்றைய கூட்டத்தில் 27 நபர்கள் கலந்து கொண்டனர். இது குறிப்பிடத் தக்கது.
நேற்றைய கூட்டத்தில் தன் இல்லத்தில் செய்த சுவைமிகு சுண்டலை அனைவருக்கும் வழங்கிய நம் நி.கு.உறுப்பினர் திருமதி. மல்லிகா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி🙏
*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*