Saturday, April 15, 2023

அறிமுகக் கூட்ட விவரணம்





★★★★★★★★★★★★★★★

தமிழ்ச் சங்கம் முகிழ்ந்தது

★★★★★★★★★★★★★★★


அன்புகெழுமிய உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய வைகறை வணக்கங்கள்.


நமது குழுவில் திட்டமிட்டபடி, நமது அறிமுகக் கூட்டம் நேற்று மாலை மிகச் சிறப்பாக நடந்தேறியது.


பெரியவர் ஜெகன் ஐயா தலைமையேற்க, ஐந்து முகக் குத்துவிளக்கை இல்லத்தரசிகள் லாவண்யா, சுபஸ்ரீ, சுதா மற்றும் திருமிகு. திருமறை ஸ்ரீனிவாசன், தனசேகரன் ஆகியோர் ஒளியேற்றினர்.


உறுப்பினர்கள் அனைவரின் உற்சாகக் குரல் ஒலியில் தமிழ்த்தாய் வாழ்த்து பண்ணிசைக்கப் பட்டது.


பின்னர் ஜெகன் ஐயா தலைமையுரை ஆற்ற, சாய்ராம் ஐயா வரவேற்புரை நல்க கூட்டம் இனிதே துவங்கியது.


ஸ்ரீவெங்கடேஷ் அவர்களின் கூட்ட அறிமுக உரையோடு தமிழ்ச் சங்க உருவாக்கத்தின் நோக்கம் மற்றும் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த அறிமுக உரைக்குப் பின் கலந்து கொண்ட தங்களின் மேலான கருத்துகளை தங்கள் சுய அறிமுகத்தோடு வழங்கினர்.


கூட்டத்தில் நமது உறுப்பினர்கள் சிலரின் கவிதை ஆக்கங்கள் நகலெடுத்து வழங்கப் பட்டது.


உறுப்பினர்களில் மூவரால் தவிர்க்கவியலா காரணங்களால் வர முடியாமற் போனது. மீதமுள்ள அனைத்து உறுப்பினர்களோடு சில புதிய தமிழ் உறவுகளும் கலந்து கொண்டமை சிறப்பாக குறிப்பிடத் தக்கது.


கலந்து கொண்டோரின் பெயரோடு அவரது பிற தகவல்கள் வருகைப் பதிவேட்டில் பதிவேற்றப் பட்ட பக்கத்தை படம் பிடித்து இந்த விவரணத்தோடு இணைத்துள்ளோம். கூட்டத்தின் படங்களும் இணைக்கப் பட்டுள்ளன நுமது பார்வைக்காக. காணொளியை 'யூட்யூபி'ல் பதிவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளவிருக்கிறோம்.


இயன்ற அளவு நமது உறுப்பினர்கள் அருமையாக தமிழில் உரையாடியது மகிழ்வின் உச்சம்.


இரண்டு சிறுமிகள் நித்யஸ்ரீ மற்றும் அவந்திகா பன்னீர் தெளித்து, இனிப்புகள் வழங்கி சிறப்பான வரவேற்பு நல்கியதோடு புகைப்படம்/காணொளி எடுத்தும் உதவினர். அவர்களுக்கு நமது நெஞ்சுநிறை நன்றி.


கூட்டத்தின் முடிவுகள்:


★ "மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் (பூர்வா)" என்ற பெயர் முன்மொழியப் பட்டுள்ளது. இதுகுறித்த உறுப்பினர்களின் கருத்துக் கேட்டு இறுதி செய்யப் படும்.


★ குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கான "பாரதி பாடல்கள் போட்டி" நடத்துவது.


★ தமிழில் குறுக்கெழுத்து, வினாடி வினா, பேச்சுப் போட்டிகள் மாதமொன்றாவது நடத்தி உறுப்பினர்களின் ஆர்வத்தை அதிகப் படுத்துவது.


★ மேமாத இறுதி அல்லது ஜூன் மாத மையத்துக்குள்ளாக துவக்க விழா கோலாகலமாக நடத்துவது.


★ தமிழில் எழுதப் படிக்காத ஆனால் ஆர்வமுள்ளோருக்கு வணிகரீதியில் இல்லாது, தமிழ் வகுப்புகள் எடுப்பது.


நன்றி!

°°°°°°°°°°


பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நெஞ்சு நிறை நன்றி.

அழகிய தமிழில் உரையாடி மகிழ்வித்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நன்றி! நன்றி! நன்றி!!

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...